வட மாகாணசபைத் தேர்தல் தமிழ்-முஸ்லிம் சமூகங்களுக்கிடையிலான நல்லுறவாக அமையட்டும் அய்யூப் அஸ்மின்

Ayyoob-Asmin-300x232வட மாகாணசபைத் தேர்தல் தமிழ்-முஸ்லிம் சமூகங்களுக்கிடையிலான நல்லுறவாக அமையட்டும் என அத்தேர்தலில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் போட்டியிடும் முஸ்லிம் வேட்பாளர் அய்யூப் அஸ்மின் இன்றைய வீரகேசரி வார வெளியீட்டுக்கு வழங்கிய செவ்வியில் குறிப்பிட்டார்.

அய்யூப் அஸ்மின் அவர்கள் வீரகேசரி வார வெளியீட்டுக்கு வழங்கிய செவ்வியின் முழுவடிவம் இங்கே பிரசுரிக்கப்படுகிறது.

கேள்வி: வட மாகாணசபைத் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கும் நல்லாட்சிக்கான மக்கள் இயக்கத்தின் தலைமையிலான கூட்டமைப்பிற்கும் இடையிலான அரசியல் உடன்பாட்டின் அடிப்படையில் தாங்கள் மன்னார் மாவட்டத்தில் வேட்பாளராக நியமிக்கப்பட்டிருக்கின்றீர்கள். எவ்வாறான உடன்பாட்டின் அடிப்படையில் தாங்கள் தேர்தலில் களமிறங்கியிருக்கின்றீர்கள்?

பதில்: சுதந்திரத்திற்குப் பின்னரான  இலங்கையின் அரசியல் களத்தில் பல்வேறு மாற்றங்கள், கட்டங்களைக் கடந்து நாம் வந்திருக்கின்றோம். அத்தகைய எல்லாக் கட்டங்களிலும் இலங்கையின் இனரீதியான முரண்பாட்டுப் பிரச்சினை முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாக அடையாளப்படுத்தப்பட்டிருக்கின்றது. அல்லது இனப்பிரச்சினையினை அடிப்படையாகவைத்து அத்தகைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கின்றன. அவ்வாறே இலங்கையின் சமகால அரசியல் சூழலும் ஒரு மாற்றத்துக்கான தேவையினை வலியுறுத்தும் காலமாக இருக்கின்றது. தமிழ்த்தேசியப் போராட்டமானது அதனது ஆயுதவடிவத்திலிருந்து விடுபட்டு மற்றுமொரு இராஜதந்திர வழிமுறையினை நோக்கி நகர்கின்ற சூழலில் நாம் இருக்கின்றோம். இங்கே சிங்கள சமூக அரசியலிலும் ஒரு மாற்றம் எதிர்பார்க்கப்படுகின்றது. எனவே இவ்வாறான மாற்றங்கள் நிகழவிருக்கின்ற தருணத்தில் முஸ்லிம் சமூக அரசியல் வேடிக்கை பார்க்கின்ற அரசியலாக இருப்பதை எம்மால் ஏற்றுக்கொள்ள முடியாது. அது மாத்திரமல்ல குறித்த மாற்றத்தில் நாம் பங்காளிகாக இருக்கவே முயற்சிக்கின்றோம். அதிலும் குறிப்பாக தமிழ் சமூகத்துடன் இருக்கமான அரசியல் உறவினைப் பேணுவதன் மூலம், அரசியல் ரீதியான இணக்கப்பாட்டின் மூலம் அத்தகைய பங்களிப்பினை எம்மால் வழங்க முடியும் என நாம் எதிர்பார்க்கின்றோம். எனவே இந்த எண்ணமே எம்மை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினருடன் கலந்துரையாடல்களை நடாத்துவதற்குத் தூண்டியது.

எனவே இந்த அரசியல் இணக்கப்பாட்டில் பிரதான உடன்பாடாக இருப்பது தமிழ்-முஸ்லிம் சமூகங்களுக்கிடையிலான நல்லிணக்கமும், அரசியல் ரீதியான இணக்கப்பாடும் ஏற்படுத்தப்பட வேண்டும் என்பதும் அதனூடாக தேசிய நல்லிணக்கத்தில் நாம் தாக்கம் செலுத்தலாம் என்பதுமாகும். வரலாற்றுக் கடமையாகவே இதனை நாம் நோக்குகின்றோம், முஸ்லிம்கள் தமிழ் மக்களின் விரோதிகள் அல்ல, உடன் பிறப்புகள், சகோதரர்கள், அண்ணனுக்கும் தம்பிக்கும் இடையிலான உறவைக் கொண்டவர்கள், ஆனால் வரலாற்றில் இரு இனங்களும் கசப்பான அனுபங்களைப் பெற்றிருக்கின்றார்கள், அத்தகைய துன்பியல் நிகழ்வுகளை தொடர்ந்தும் மீட்டி மீட்டிப் பேசுவதால் எவ்வித பயனும் கிடைத்துவிடப்போவதில்லை. மாற்றமாக இரண்டு சமூகங்களும் முன்னோக்கி சிந்தித்தவர்களாக முரண்பாடுகளை முதன்மைப்படுத்துவதை விடவும், உடன்பாடுகளை முதன்மைப்படுத்தி தமக்கான தீர்வுகளைப் பெற்றுக்கொள்வதே காலத்தின் தேவையாகவும் இருக்கின்றது. இதுவே எமது பிரதான உடன்பாடாகும்.

அடுத்து 1990களில் புலிகளால் பலவந்தமாக வெளியேற்றப்பட்ட வடக்கு முஸ்லிம்களின் விவகாரங்கள் முக்கியத்துவம் பெறுகின்றன. இலங்கையின் பேரினவாதிகளுக்கு ஆதரவு தரும் அரசாங்கங்கள் ஒருபோதும் வடக்கு முஸ்லிம்களின் விடயங்களில் இதயசுத்தியோடு செயற்படும் என எதிர்பார்க்க முடியாது, யுத்தத்திற்குப் பின்னரான 41/2 வருடங்களில் வடக்கு முஸ்லிம்களின் மீள்குடியேற்றத்திற்கென அரசாங்கம் எவ்வித காத்திரமான நடவடிக்கைகளையும் மேற்கொள்ளவில்லை, மாற்றமாக முஸ்லிம்களைப் பகடைக் காய்களாகப் பயன்படுத்தி, இராணுவக் குடியேற்றங்களையும், சிங்கள ஆதிக்கத்தையும் வடக்கில் நிறுவவே அரசாங்கம் முயற்சிக்கின்றது. தமிழ்-முஸ்லிம் சமூகங்களிடையே உட்பூசலை வளர்த்து அதன் மூலமாக இலாபமடைவதே இவர்களின் திட்டமாக இருக்கின்றது. முஸ்லிம் அரசியல் தலைவர்களை நம்பிக்காத்திருந்த வடக்கு முஸ்லிம்கள் பல சந்தர்ப்பங்களில் ஏமாற்றப்பட்டிருக்கின்றார்கள். இந்த அடிப்படையில் வடக்கு முஸ்லிம்களின் மீள்குடியேற்றம் சார்த விடயங்களை நாங்கள் முதன்மைப்படுத்தினோம். வடக்கு முஸ்லிம்கள் மூன்றுவகையான பிரச்சினைகளை எதிர்நோக்குகின்றார்கள். முதன்மையாக “இருப்பு” சார்ந்த பிரச்சினைகளை அவர்கள் எதிர்கொள்கின்றார்கள். தமிழ் மக்களினால் வடக்கு முஸ்லிம்களின் இருப்பு உறுதிசெய்யப்படவேண்டிய அவசியம் இருக்கின்றது. அடுத்து மீள்குடியேற்றம் சார்ந்த பிரச்சினைகளை அடையாளப்படுத்த முடியும், மீள்குடியேற்றத்தில் அடிப்படையாக தொழில் வாய்ப்புகள் சார்ந்த விடயங்கள், காணி சார்த விடயங்கள், வீடமைப்பு மற்றும் உட்கட்டமைப்பு சார்ந்த விடயங்கள் முக்கியத்துவம் பெறுகின்றன. இறுதியாக தமிழ்-முஸ்லிம் சமூகங்களுக்கிடையிலான நல்லிணக்கம் சார்ந்த விடயங்கள் முக்கியத்துவம் பெறுகின்றன. இவ்வாறான விடயங்களை உள்ளடக்கியதாக எமது இரண்டாவது கோரிக்கை அமைகின்றது, அமையவிருக்கின்ற வடக்கு மாகாணசபை இத்தகைய விடயங்களுக்கான தீர்வினைப் பெற்றுத்தரும் என நாம் எதிர்பார்க்கின்றோம்.

இறுதியாக வடக்கில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடனான இணக்கப்பாட்டு அரசியல் முன்னெடுப்புகளை உறுதிப்படுத்தும் வகையில் முஸ்லிம் பிரதிநிதித்துவம் ஒன்றினை ஏற்படுத்தல் என்ற மூன்று முக்கிய விடயங்களே எமக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினருக்கும் இடையில் உடன்பாடுகளாக அமைந்திருக்கின்றன.

கேள்வி: குறித்த பிரதிநிதித்துவம் மன்னாரில் நிறுத்தப்பட்டிருப்பதற்கான நியாயப்பாடுகள் என்ன?

பதில்: வடமாகாணத்தில் ஐந்து மாவட்டங்களில் தேர்தல் நடைபெறவிருக்கின்றது. குறித்த ஐந்து மாவட்டங்களிலும் முஸ்லிம் வேட்பாளர் ஒருவர் மன்னாரில் நிறுத்தப்பட்டிருப்பதற்கான நியாயங்கள் பல இருக்கின்றன.

முதன்மையாக யாழ்ப்பாணத்திலேயே நான் வேட்பாளராக நியமிக்கப்பட இருக்கின்றேன் என்ற விடயம் கலந்தாலோசிக்கப்பட்டாலும் கூட இறுதி நேரத்தில் நான் மன்னாரில் நிறுத்தப்பட்டேன், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு குறித்த சந்தர்ப்பத்தில் மிகவுமே வெளிப்படையாக எம்முடன் செயற்பட்டனர், அதன்போது யாழ் மாவட்டத்தில் ஆசன ஒதுக்கீட்டில் காணப்பட்ட நடைமுறைச் சிக்கல்களே காரணமாக அடையாளப்படுத்தப்பட்டது. ஆனால் மன்னாரில் நாம் நிறுத்தப்பட்டபோது நல்லாட்சிக்கான மக்கள் இயக்கத்தின் தலைமையிலான அரசியல் கூட்டமைப்பு மேற்படி விடயத்தை மிகவும் சாதகமாகவே நோக்குகின்றது. குறிப்பாக மன்னார் மாவட்டத்தில் தமிழ்-முஸ்லிம் உறவானது திட்டமிட்ட அடிப்படையிலோ அல்லது திட்டமிடப்படாத அடிப்படையிலோ சீர்குகைந்திருக்கின்றது, இதனை சீர்செய்யவேண்டிய பாரிய பொறுப்பினை நாம் உணர்கின்றோம், இவ்வெறுப்புணர்வு தொடர்ந்தால் அது மன்னாரின் அமைதிக்குப் பாதிப்பை ஏற்படுத்தும் எனவே அவ்வாறான ஒரு மோசமான நிலைமையை ஏற்பட நாம் இடமளிக்கக் கூடாது.

மன்னார் முஸ்லிம்களின் நலன்களின் இதுவரை எவ்வித அக்கறையும் செலுத்தாத முஸ்லிம் காங்கிரஸ் போன்ற கட்சிகள் மன்னாரில் முஸ்லிம்களின் வாக்குகளை இலக்கு வைத்து செயற்படுகின்றன, இதன்மூலம் ஒரு முஸ்லிம் பிரதிநிதியையேனும் மாகாணசபைக்கு அனுப்ப இடமளிக்கக் கூடாது என்பது அவர்களது எண்ணமாக இருக்க முடியும், எனவே மன்னார் மக்களுக்கு ஆளும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் பிரதிநிதித்துவத்தை உறுதி செய்வது எமது தேவையாகவும் பொறுப்பாகவும் இருக்கின்றது. எனவே மன்னார் முஸ்லிம்களின் வாக்குகள் சிதறடிக்கப்படாமல் இருப்பதற்கும்  மன்னாரில் முஸ்லிம்களின் வாக்குகள் தமிழ்த் தேசியக்கூட்டமைப்பிற்கும் வந்துசேரவேண்டும். அதனூடாக உரிமையோடு வடக்கின் ஆளும் தரப்பாருடன் மன்னார் மாவட்ட முஸ்லிம்கள் தொடர்புகளை பேணிக்கொள்ள முடியும். இவ்வாறான பல்வேறு காரணங்களின் அடிப்படையில் வேட்பாளராக மன்னார் மாவட்டத்தில் எமது பிரசன்னம் மேலும் அர்த்தமுள்ளதாகின்றது.

கேள்வி: வடக்கின் தேர்தல் குறித்தும் தேர்தல் கால களநிலவரங்கள் குறித்தும் தாங்கள் பொதுவாக என்ன கருதுகின்றீர்கள்?

பதில்13வது திருத்த மூலத்தின் அடிப்படையில் அமைக்கப்பட்ட மாகாணமுறைமைகளில் கடந்த 25 ஆண்டுகளில் முதன்முறையாக வடக்கு மாகாணத்திற்கான தேர்தல் இடம்பெறவிருக்கின்றது, இதிலே தமிழ் மக்கள் ஆர்வத்தோடு பங்கேற்க இருக்கின்றார்கள், இந்த மக்களின் ஆர்வத்தை அரசாங்கம் எச்சரிக்கையோடு நோக்குகின்றது. ஆளும் ஐ.ம.சு.கூ குறித்த தேர்தலில் படுதோல்வியைத் தழுவும் அது நிச்சயிக்கப்படதொன்று ஆனால் படுதோல்வியை தோலிவாயக் குறைப்பதில் ஆளும் ஐ.ம.சு.கூ அதீத அக்கறையுடன் செயற்படுவதை எம்மால் காண முடிகின்றது. அதிகமான சுயேட்சைக் குழுக்கள் களத்தில் வாக்குவேட்டைக்காக களம் கண்டுள்ளன, பெருந்தொகையான பணப்புழக்கம் வடக்குத் தேர்தலில் காணப்படுகின்றது, அரச உடமைகள் தேர்தலுக்காகப் பயன்படுத்தப்படுவதைக் காணக்கூடியதாக இருக்கின்றது. அதுமட்டுமன்றி அச்சுறுத்தல் கலாச்சராமும், இராணுவ ஈடுபாடுகளையும் தேர்தலில் காணக்கூடியதாக இருக்கின்றது.

இவை அனைத்தும் ஜனநாயக ரீதியான, நியாயமான, சுயாதீனமான தேர்தலுக்கு அச்சுறுத்தலாகவே அமையவிருக்கின்றன, சுயேட்சைக் குழுக்களின் அதீத பிரசன்னத்தின் நோக்கத்தை இப்போது எம்மால் உணரமுடிகின்றது. அவை படிப்படியாக தமது ஆதரவினை ஆளும் ஐ.ம.சு.கூட்டமைப்புக்கு வழங்கத் தொடங்கியிருக்கின்றன இதன் மூலம் வாக்குச்சீட்டில் குளறுபடிகளை ஏற்படுத்தவும், வாக்குகள் எண்ணப்படும் சந்தர்ப்பத்தில் குளறுபடிகளை ஏற்படுத்துவும் வாய்ப்புகள் இருப்பதாக உணர்கின்றோம். இவ்வாறாக குறித்த தேர்தலின் சுயாதீனத்தன்மை பாதிக்கப்பட்டிருக்கின்றது என கூறமுடியும்.

கேள்வி; வடக்கில் அபிவிருத்தித்திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டிருக்கின்ற நிலையில் அரசாங்க கட்சியாகிய ஆளும் ஐ.ம.சு.கூவுக்கு மக்கள் ஆதரவு இருக்காது என எண்ணுகின்றீர்களா?

பதில்: இது ஒரு முக்கியமான கேள்வியாகும் வடக்கின் அபிவிருத்தி செயற்பாடுகளை நோக்கும்போது அங்கே பொதுவான அபிவிருத்தி, வடக்கு மக்களுக்கான அபிவிருத்தி என இரண்டு கூறுகளை எம்மால் காண முடியும்,  அபிவிருத்திக் கற்கைகளில் (Sustainable Development) ஏற்புடைய அபிவிருத்தி அல்லது தன்னிறைவான அபிவிருத்தி என இதை நோக்க முடியும். வடக்கில் நிகழ்ந்துகொண்டிருப்பது தன்னிறைவான அபிவிருத்தி அல்ல மாற்றமாக பொதுவான அபிவிருத்தியாகும். மக்களின் அன்றாட வாழ்க்கை ஒழுங்கில் இத்தகைய அபிவிருத்திகளால் எவ்வித மாற்றங்களும் ஏற்படுத்தப்படமுடியாதவையாகும். இன்னும் ஆழமாக இதனை நோக்குகின்றபோது ஆக்கிரமிப்பிக்கான அபிவிருத்தி என்ற பொருளிலும் இதனை நாம் குறிப்பிட முடியும். இத்தகைய ஆகிரமிப்பு அபிவிருத்தியின் விளைவாக வடக்கின் மக்கள் பல்வேறு பாதிப்புகளை நாளாந்தம் சந்திக்கின்றார்கள்.

கடன் வழங்கும் நிறுவனங்களும் தவனைக் கட்டண முறையில் இயங்கும் நிறுவனங்களும் மக்களின் மீது ஆதீத கடன் சுமையினை ஏற்படுத்தியிருக்கின்றன,அன்றாடத் தொழில், வர்த்தக நடவடிக்கைகள் அதிக அளவில் பாதிக்கப்பட்டிருக்கின்றன, மக்கள் அன்றாடம் உணவுக்குக்கூட அதிக கஷ்டங்களை எதிர்கொள்கின்றார்கள். கொள்ளை, களவுச் சம்வங்கள், மோசடிகள் அதிகரித்துள்ளன  இவ்வாறான நிலையில் தற்போது மேற்கொள்ளப்பட்டிருக்கின்ற பொதுவான அபிவிருத்திகள் மக்களால் ஏற்றுக்கொள்ளப்பட்டவையல்ல என்பதை இங்கு குறிப்பிட வேண்டும், இதன் காரணமாக மக்கள் வாக்களிப்பார்கள் என எதிர்பார்க்க முடியாது.

கேள்வி: வடக்கில் இராணுவ பிரசன்னம் குறித்து..?

பதில்: வடக்கில் 5 பொதுமகனுக்கு 1 இராணுவம் என்ற விகிதாசாரத்தில் இராணுவம் நிலைகொண்டுள்ளது, இதற்கான நியாயம் அல்லது தேவை என்ன என்ற கேள்வி பரவலாக பலதரப்பிலும் இருந்து எழுகின்றது. மக்களின் இயல்பு வாழ்க்கைக்கு இது எப்போதும் பாதிப்பாகவே அமையும். இராணுவ பிரசன்னத்தின் மூலம் மக்களின் சமூக, பொருளாதார, அரசியல் வாழ்வொழுங்கில் அதீத பாதிப்புகள் ஏற்பட வாய்ப்பிருக்கின்றது, ஆனால் இது குறித்து மக்கள் அறியாதவர்களாகவே இருக்கின்றார்கள், மக்களின் உள்ளங்களில் பூரணமான சுதந்திர உணர்வினைக் காணமுடியாதிருக்கின்றது. எனவே ஜனநாயக ரீதியிலான செயற்பாடுகளுக்கு அச்சுறுத்தலாக இருக்கும் இராணுவம் வடக்கில் மட்டுப்படுத்தப்படவேண்டும் என்பது எமது கருத்தாகும்.

கேள்வி: தென்னிலங்கையில் இருக்கின்ற சிங்கள தீவிரவாத அமைப்புகள் தங்களது தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடனான உறவுகளை விமர்சிக்கின்றார்கள், இது எவ்வாறான தாக்கங்களை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கின்றீர்கள்?

பதில்: சிங்களப் பேரினவாத அமைப்புகள் எமது நடவடிக்கைகளால் திருப்திப்படுத்த முடியும் என நான் எதிர்பார்க்கவில்லை, அவர்கள் இந்த நாட்டின் சாபக்கேடுகள், அவர்களை இந்த தேசத்தில் இருந்து நாடு கடத்தவேண்டும், அப்போதுதான் இந்த நாடு அமைதியான நாடாக இருக்கும் என நான் நம்புகின்றேன், புத்தரின் சித்தாந்தங்களுக்கு இவர்கள் எப்போதும் மாறானவர்கள், ஐ.நா மனித உரிமைப் பேரவையில் தலைவி நவனீதப்பிள்ளை அவர்களுக்கே புலி வேசம் போடத்தயங்காத இத்தகைய பேரினவாதிகள் எமது நகர்வு குறித்து விமர்சிப்பார்கள் என்பது அறியப்பட்ட விடயமே, அவர்கள் விடயத்தில் சிங்கள மக்கள் விரைவில் காத்திரமான நிலைப்பாடுகளை மேற்கொள்வார்கள் என நாம் எதிர்பார்க்கின்றோம்.

கேள்வி: தங்களுடைய மாவட்டத்தின் வேட்பாளர்களுக்கு தாங்கள் கூறவிரும்புவது?

பதில்: வாக்கு என்பது தற்போது தங்களிடம் தரப்பட்டுள்ள ஆயுதம், தமிழர் உரிமைப்போராட்டத்தில் முக்கியமானதொரு கட்டத்தில் நாம் எல்லோரு இருக்கின்றோம், மக்கள் தங்களது வாக்குரிமையினை எவ்வாறு பாவிக்கப்போகின்றார்கள் என்பதிலேயே குறித்த போராட்டத்தின் வெற்றியும் தோல்வியும் தங்கியிருக்கின்றது. எனவே இம்முறை வடக்குத் தேர்தலில் வரலாறு காணாத வாக்களிப்பு வீதத்தை மக்கள் உறுதி செய்யவேண்டும் என்று கேட்டுக்கொள்கின்றேன். அத்தோடு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சின்னமாகிய வீட்டுக்கு வாக்களித்து சிறுபான்மை உரிமைப்போராட்டத்தில் ஒரு பாரிய திருப்பத்தை தாங்கள் ஏற்படுத்த வேண்டும் எனவும் கேட்டுக்கொள்கின்றேன்.

Advertisements
This entry was posted in Uncategorized. Bookmark the permalink.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s